17/12/2025
விதைச் சட்ட மசோதா- 2025 ஐ ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சட்டமுறையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை விதைகளின் மீது நிலைநாட்டவும் விதைகளின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு/குறு உழவர்களின் உரிமைகளைச் சிதைக்க முனைகிறது, விதைத் துறையை வாழ்வாதாரத்தின் மையத்தில் இருந்து சந்தையின் மையத்திற்கு உந்தித் தள்ளும் வகையில் உள்ளது.
உண்மையில் விதை ஒரு நாட்டினுடைய உணவின் உயிர்மூச்சாக உள்ளது. விதை என்பது வெறும் வேளாண் இடுபொருள் பண்டம் அல்ல, உயிரியல் நினைவகம், பண்புக் கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, வேளாண்மைத் தொழில்நுட்பம் அனைத்திற்கும் மேலாக நமது அடையாளம். தற்போது நடைமுறையில் உள்ள 1966ஆம் ஆண்டு விதைச்சட்டத்தை மாற்றியமைக்கின்ற வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 1966 விதைச் சட்டம் எந்தக் காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கான எவ்வித விளக்கங்களும் வரைவு மசோதாவில் அளிக்கப்படவில்லை. மேலும் 1966 விதைச் சட்டம் வர்த்தக ரீதியாக உள்ள விதைகளைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் மட்டுமே செயல்படுகிறது.
சமூகச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை 1966 விதைச் சட்டம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. அவை விவசாயிகளின் உரிமையாக இருப்பதை 1966 சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாகப் புதிய விதைச் சட்ட மசோதா, அனைத்து வகையான விதைகளையும் புதிய சட்டத்தின் கீழாகப் பதிவு செய்ய வலியுறுத்துகிறது.
இந்திய விதை இறையாண்மையின் மீதான இத்தாக்குதலை எதிர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தாளாண்மை உழவர் இயக்கத்துடன் பூவுலகின் நண்பர்கள் கருத்தரங்கு ஒன்றை 17.12.2025 அன்று மாலை எழும்பூர் இக்சா மையத்தில் ஒருங்கிணைக்கிறது. இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகைத் தருமாறு அழைக்கிறோம்.
பதிவுசெய்ய:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOidztJ4QaZf6GgSErcEtSiONQTevGY4gv-eLKpDMYCXDdXA/viewform ...
தொடர்புக்கு:
ஆதர்ஷ்: 90949 90900