13/12/2023
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்,
புதுச்சேரி 609606.
*இறைவனின் திருப்பெயர்: தர்ப்பாரண்யேஸ்வரர்.
*அம்பிகையின் திருப்பெயர்: பிராணேஸ்வரி.
*இது சம்பந்தர் அப்பர், சுந்தரர், மூவராலும் பாடல் பெற்ற தலம்.
*சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற திருநாமத்துடன், தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார்.
*தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. "விடங்கன் என்றால் 'செதுக்கப்படாத மூர்த்தி' என்று பொருள்.
*திருநள்ளாறு சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
*தேவர்களை தவிர்த்து நிடத நாட்டு மன்னன் நளனை கரம்பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோபமடைந்த தேவர்கள் சனிபகவானைக் கொண்டு நளனுக்கு துன்பம் விளைவித்தனர். எல்லா செல்வத்தையும் இழந்து இறுதியில் தமயந்தியையும் பிரிந்து சேவகனாக மாறினான் நளமகாராஜா.
*பின்னர் இத்தலத்து இறைவனை நளமகாராஜா வழிபட, தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானின் பீடிப்பிலிருந்து நளனை விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தினார். எனவே இத்தலம் நள்ளாறு என அழைக்கப்படுகிறது.
*நளன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.
*சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
*சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய "போகமார்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படும் திருநள்ளாறு பதிகம் பாடுவது நல்லது.
*திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.
திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும்